செந்தூர் முருகன் கோயிலும், செந்நெல் முதுகுடியினரும்
செந்தூர் முருகன் கோயிலும், செந்நெல் முதுகுடியினரும்
முத்துக் கொழிக்கும் பாண்டி மண்டலக் கடற்கரையில் அமைந்துள்ள பழம்பெரும் எழிலூர் திருச்செந்தூர். இக்கடற்கரையில் அமைந்துள்ள மலை 'சந்தன மலை' என வழங்கப் பெற்றது. 'செந்தின் மலை' எனவும் அதற்குப் பெயர் இருந்தது. இது மருதமும், நெய்தலும் மயங்கிய ஊர் என்பதைக் கடைச்சங்கப் புலவர் பரணர் அகநானூற்றில்
"கழனி உழவர் கலிசிறந்(து) எடுத்த
கறங்கிசை வெரீஇப் பறந்த தோகை
அணங்குடை வரைப்பகம் பொலிய வந்திருக்கும்
திருமேனி விளக்கின் அலைவாய்....."
எனப் பாடியுள்ளார். (பேராசிரியர் ந.கல்யாண சுந்தரம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வரலாறு, ப.1 )
தமிழ் இலக்கிய வரலாற்று ஆசிரியர் எம்.எசு.பூரணலிங்கம் இரண்டாம் தமிழ்சங்கமிருந்த இடம் கபாடபுரம் என்றக் குறித்துப் பிறைகோடுகள் "அலைவாய்" எனக் குறித்துள்ளார்.
வால்மீகி, இராமாயணத்தில் கபாடபுரத்தின் இருப்பிடத்தைச் சுட்டும் பொழுது
"தாமிரபருணி அழகிய சந்தனச் சோலைகளால்
மூடப்பெற்ற திட்டுக்களையுடயதாய்க்
கணவனிடத்தில் அன்புள்ள யுவதியானவள்
புக்ககம் புகுமாறு போல சமுத்திரத்தில்
சென்று விழும், பிறகு பொன்னிறைத்தாயும்
பாண்டியர்க்கு யோக்கியமாயுமுள்ள கபாடத்தைப்
பார்க்கக் கடவீர்கள்"
(பேராசிரியர் ந.கல்யாண சுந்தரம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வரலாறு, ப.1)
எனக்குறித்துள்ளார்.
வால்மீகி கபாடபுரத்திற்க்குக் கூறியுள்ள குறிப்புகள் திருச்செந்தூருக்கு மிகவும் பொருத்தி வருகின்றன.
தண் பொருநையாறு (தாம்பிரபரணி) கடலோடு கலக்குமிடத்திற்க்குத் தெற்கே சந்தனச் சோலைகளும், முத்துக்களும் காணப் பெற்ற இடம் திருச்செந்தூராகும்.
'சந்தனக்காட்டுகுள்ளே கந்தனை நான் கண்டு கொண்டேன்' என்பது இவ்வட்டாரத்து நாடோடிப் பாடலின் ஓரடி. திருச்செந்தூர் முருகன் குடியிருக்கும் மலைக்குச் சந்தன மலை எனப் பெயர். கந்தபுராணம் இம்மலையைக் 'கந்தமாதன பர்வதம்' எனப் புகழும், இன்று இம்மலையில் சந்தன மரங்கள் இல்லை. ஆயினும் அருணகிரி நாதர் காலத்தில் (கி.பி.15 ஆம் நூற்றாண்டு என்பர்) இம்மலையில் சந்தன மரங்கள் அடர்ந்திருந்தன. செந்தில் கந்தனைப் பாடும் போது அருணகிரி நாதர்,
"சந்தனத்தின் பைம் பொழில் தண் செந்திலில்
தாங்கும் பெருமாளே"
(பேராசிரியர் ந.கல்யாண சுந்தரம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வரலாறு, ப.2)
எனப் பாடியுள்ளார். இன்றும் இக்கோயிலில் வழங்கப்படுமளவு சந்தனம் ஏனைய முருகன் கோயில்களில் வழங்கப் படுவதில்லை. கால மாறுபாடுகளால் சந்தன மரங்கள் அழிந்து போயிருக்கலாம்.
சாணக்கியர் தம் பொருள் நூலில் 'பாண்டியக் கவாடம் என்ற முத்தைப் பற்றி கூறுகிறார். கபாட புரத்தில் முத்துக்கள் கிடைத்தன. இன்றும் இப்பகுதியில் முத்தெடுக்கின்றனர். அருணகிரி நாதரும்,பகழிக் கூத்தரும் இவ்வூரில் முத்துக்கள் கொழிப்பதைப் புகழ்ந்து பாடியுள்ளனர்.
"செஞ்சொற் புலவர்கள் சங்கத் தமிழ் தெரி
செந்திற் பதி நகர் உறைவோ னே"
(பேராசிரியர் ந.கல்யாண சுந்தரம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வரலாறு, ப.2)
என அருணகிரி நாதர் பாடியுள்ளார். குன்றெறிந்த குமரவேள் சங்கத்தில் இருந்ததை நக்கீரர் குறிப்பிட்டுள்ளார். சங்கத்திற்கு இலக்கண நூல் ஈந்த அகத்தியருக்கு இங்கு கோயில்கள் உண்டு. கபாடபுரத்தின் ஒரு பகுதியாக இவ்வூர் விளங்கி இருக்கிறது. மீதமுள்ள பகுதியே கடலால் கொள்ளப் பட்டுள்ளது. பாண்டிய மன்னர்களான சிவனும், முருகனும் கபாடபுரத்திலுள்ள இடைச்சங்கம் எனப்படும் இரண்டாம் தமிழ்ச் சங்கத்தில் அவைப் புலவர்களாக இருந்ததாகக் கூறப்படும் செய்திகள் இதனை உறுதிப் படுத்துகின்றன.
கலங்கள் வந்து தாங்கும் வாயிலாக அமைந்ததால் கபாடபுரம் என்றும்,பின்பு அலைவாய் எனவும் அழைக்கப்பட்டிருக்கலாம். அகநானூறு, தொல்காப்பிய மேற்கோள் செய்யுள், திருமுருகாற்றுப் படை கந்த புராணம் ஆகிய நூற்கள் இவ்வூரை 'அலைவாய்' எனக் குறிப்பிடுகின்றன.
முருகன் நிலை பெற்று இருப்பதால் 'திரு' என்ற அடைமொழி பெற்றுத் 'திருச்சீரலைவாய்' என்ற பெயர் நிலைத்தது. இக்கோயிலில் அலைவாயு கந்த பெருமான் எனப் பெயருள்ள இவ்வூருக்கு நாமனூர் அலைவாய் என்றும் பெயர் வழங்கப்பட்டது.
திருச்செந்தூரின் நடுவில் அமைந்துள்ள சிவக்கொழுந் தீசுவரர் கோயில் கல்வெட்டில் திருச்செந்திலூர் என்ற பெயர் காணப்படுகிறது. இப்பெயர் மருவியே 'திருச்செந்தூர்' என்றாகியிருக்க வேண்டும்.
கி.பி.1648 ஆம் ஆண்டு உலாந்தர்கள் சிவக்கொழுந்தீஸ்வரர் கோயிலில் தாக்குதல் நடத்தியாதத் தெரிகிறது. இக்கோயிலிலுள்ள பல சிலைகள் அடித்து நொறுக்கப பட்டுள்ளன. சிவக்கொழுந்தீஸ்வரர் கோயிலில் முருகன் சில இருந்ததென்றும், அது கி.பி.10 ஆம் நூற்றாண்டில் கடற்கரைக் கோயிலுக்கு மாற்றப்பட்டது என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். குலசேகரன் பட்டணம் சரவணமுத்து ஞானியரது ஏடு "கி.பி.1648 ஆம் கடற்க்கரை கோயில் முருகன் கோயிலாக மாற்றப்பட்டது" எனக் குறிப்பிடுகிறது. (பேராசிரியர் ந.கல்யாண சுந்தரம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வரலாறு, ப.5) பேராசிரியர். க.நெடுஞ்செழியன் கருதுவதைப் போல் ஐயனார் கோயிலாகவே கடற்கரைக் கோயில் இருந்துள்ளது. அதற்க்கு முன்பாக இக்கோயில் பாண்டியரின் அரண்மனையாத் தோற்றம் பெற்றுள்ளது.
கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் பல்லவர்கள் ஏராளமான குகைக் கோயில்கள் அமைத்தனர். பாண்டியர்களும் குகைக் கோயில் அமைத்தனர். திருச்செந்தூர்க் குகைக் கோயிலும் இக்காலத்திலேயே அமைக்கப் பட்டிருக்கலாம்.
"பாண்டிய நாட்டிலும் குடைவரைக் கோயில்கள் இருக்கின்றன... அவை பல்லவர்கள் காலத்திலேயே உருவாக்கப் பட்டவை என்பதிலும் பல்லவக் கலை மரபையே பின்பற்றியவை என்பதிலும் ஐயமில்லை" என்கிறார் கே.ஏ.நீல கண்ட சாசுதிரி (பேராசிரியர் ந.கல்யாண சுந்தரம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வரலாறு, ப.7). அமெரிக்க நாட்டு பிட்சுபர்க்குப் பலகலைக்கழகச் சமத் துறைப் பேராசிரியர் டாக்டர் பிரட்டு குளோதியும் இம்முடிவுக்கே வருகிறார்.
கி.பி 8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகக் கருதப்படும் ஆதி சங்கரர் திருச்செந்தூர் சுப்ரமணிய புரத்தில்
"பெரிய கடலின் கரையினிலே, முனிவர்கள் போற்றிப் புகழ்கிறதாயும், பாவங்களைத் தீர்க்கவல்லதாயும் விளங்கும் கந்தமாதன மலையில் அருட்பெரும் சோதியாக் குகப் பெருமான் ஒருக்கையில் அமர்ந்து அண்டினவர்களுக்குக் கெல்லாம் ஆதரவு தருகிறார். அவரது பொற்பாதங்களைப் பற்றி உய்வாம்" என்கிறார் (பேராசிரியர் ந.கல்யாண சுந்தரம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வரலாறு, ப.7), இதனால் ஆதிர் சங்கரர் காலத்திற்கு முற்பட்டே இஃது ஒரு குகைக் கோயிலாக இலங்கியது என்பது புலனாகும்.
"வரகுண பாண்டியனால் திருச்செந்திற் கோயில் நித்த வழிபாட்டிற்காக 1400 பொற்காசு பன்னீருராரிடைப் பகிர்ந்து கொடுக்கப் பட்டது. வட்டி ஆண்டிற்கு ஒரு காசிற்கு இரு கலம் நெல் என்றும், வட்டியைக் கொண்டு வழிபாட்டை நடப்பிக்க வேண்ருமேன்ரும் வட்டி நிலுவையாயின் இரட்டியும் 25 காசு தண்டமும் இருக்க வேண்டுமென்றும் விதிக்கப் பட்டன. இக்கல்வெட்டு பொறிக்கப் பட்ட காலம் கி.பி. 875 ஆம் ஆண்டாகும்." (ஞா.தேவநேயன் (பாவாணர்), பழந்தமிழராட்சி, ப.126 - 127 )
பாண்டியன் மாறவர்மன் காலத்தில் மங்கலக்குறிச்சி என்னும் ஊரில் இரண்டு மா அளவு நிலங்களைப் பூசைக்குக் கொடுத்ததாக இக்கோயிலுள்ள ஒரு கல்வெட்டுக் கூறுகிறது. கி.பி.15 ஆம் நூற்றாண்டில் இக்கோயிலில் நிறுவப்பட்ட ஒரு கல்வெட்டு இக்கோயிலில் உள்ள நக்கீரர் சிலைக்குப் பூசை செய்வதற்காக ஒரு நிலத்தை 630 கலியுக ராமன் பணத்திற்கு விற்றுக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் திருச்செந்தூர்க் கோயிலில் நக்கீரர் சிலை இருந்ததை அறிகிறோம்.ஆனால் இப்போது நக்கீரர் சிலை திருச்செந்தூர்க் கோயிலில் இல்லை.
"கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்கள் அடையாளம் தெரியாமல் மறந்து விட்டனர். நாயக்க மன்னர்களும் இப்பகுதியின் ஆட்சியைக் கைப்பற்றவில்லை. அடுத்திருந்த திருவிதாங்கூர் மன்னர்கள் திருநெல்வேலிச் சீமையின் தென்பகுதியை ஆண்டனர். இதற்கான ஆவணம் திருச்செந்தோர்க் கோயிலில் உள்ளது" எனக் குறிப்பிடுகிறார் கால்டுவெல். (பேராசிரியர் ந.கல்யாண சுந்தரம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வரலாறு, ப.8 )
ஆனால் பாண்டிய மன்னர்களும், அவர் தம் வழி வந்த மரபினரும், மரபினரும் திட்டமிட்டு அடையாளம் தெரியாமல் ஆக்கப் பட்டுள்ளனர். திருச்செந்தூர்க் கோயிலின் மேற்க்குக் கோபுர வாயில் அடைக்கப்பதர்க்கான காரண காரியங்களை ஆய்ந்து ஆராய்வோமானால் பாண்டிய மரபினரை எளிதாக் கண்டறிய முடியும்.
திருச்செந்தூர்க் கோயிலுக்கு நேரடி உறவும், உரிமையும் உள்ள ஊர் 'திருச்செந்தூர்பட்டி'. இவ்வூர் திருவைகுண்டம் வட்டம், ஆழ்வார்கற்குளம் ஊராட்சிக்கு உட்பட்டதாகும். இவ்வூர் 'திருச்செந்தூர்ப் பச்சேரி' எனவும் வழங்கப்படுகிறது. பொருநை ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள பள்ளர்கள் மட்டுமே வாழக்கூடிய இச்சிற்றூர் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஊராகும். வயல் சூழ்ந்த இவ்வூரைச் சுற்றி 35 கோட்டை விதைப்பாடு நிலம் உள்ளது. கோயில் தோன்றிய காலந்தொட்டு பன்னெடுங்காலமாக 'நாள் பூசை' செய்வதற்குப் பல்வேறு ஊர்களில் இருந்து பள்ளர் குல மக்கள் பொருநை ஆற்றில் புனித நீராடி, நெல் குத்தி அரிசி கொண்டு சென்றுள்ளனர். இவ்வரிசியின் மதிப்பு '3 1 /2 கோட்டை' எனக் கள ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 1947 க்கு முன் திருச்செந்தூர்ப் பட்டியிலிருந்து திருச்செந்தூர்க் கோயிலுக்கு 'நாட்கதிர்' கொண்டு செல்லும் மரபு இருந்துள்ளது. 'நாட்கதிர்' கொண்டு செல்லத் திருச்செந்தூரில் இருந்து கோயில் யானை திருச்செந்தூற்பட்டிக்கு வந்து 'நாட்கதிரை' எடுத்துக் கொண்டு சென்று நான்கு வீதிகளில் வளம் வந்து மேற்கு வாயில் வழியாகக் கருவறைக்குள் சென்று நாட்கதிரைக் கசக்கி அதனை அரிசியாக்கி அதில் ஒரு கைப்பிடி அரிசியை எடுத்துக் கோயிலில் உள்ள அரிசியோடு போட்டுப் பொங்கல் வைப்பார். யானையுடன் நாட்கதிரைக் கொண்டு செல்லக் கூடிய பள்ளர்களின் செலவுத் தொகையைக் கோயில் குடும்புவே ஏற்றுக் கொள்ளும். தமிழ்க் கடவுள் முருகனுக்குப் படைத்த அப்பம், தேங்காய், பழம் ஆகிய பண்டங்களைக் கோயிலுக்குச் சென்றவர்கள் பெற்றுக் கொண்டு வந்து திருச்செந்தூர்பட்டியில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் முறைப்படி வழங்குவர். பிற்காலங்களில் சீட்டுக் குலுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்ட இருவர் 'நாட்கதிரைக்' கொண்டு சென்று கோயிலின் மேற்கு வாயில் வழியாக மண்டபத்தில் வைத்து, அதனை அரிசியாக்கிப் பொங்கலிடுவர். இதற்காகக் கோயில் குடும்பில் இருந்து ரூபாய் 500 செலவுத் தொகையாகக் கொடுக்கப்பட்டு வந்தது. ஒரு முறை சீட்டுக் குலுக்கலில் தேர்ந்தெடுக்கப் பட்ட விவரமறியாத இருவர் நாட்கதிர் கொண்டு செல்ல அங்கே மேலாண்மை செய்ய வந்த வெள்ளையர்கள் நாட்கதிர் கொண்டு சென்ற பள்ளர்களைப் பற்றி கேட்டபோது கோயிலில் ஆதிக்கம் செலுத்தி வந்த வந்தேறி ஆரியப் பிராமணர்கள், "கோயிலுக்கும், பள்ளர்களுக்கும் இனி எந்த உறவும், வரவும் இல்லை" என ஏமாற்றிக் கையொப்பம் வாங்கிக் கொண்டு, 500 ரூபாயும், அப்பமும், தேங்காய், பலமும் கொடுக்காமல் அனுப்பி விட்டனர். அத்தோடு கோயில் குடும்பிற்க்கும், பள்ளர்களுக்குமான நிருவாக உறவுகள் நிறைவுற்றது.
திருமணம் செய்து கொள்ளக் கூடியவர்கள் திருச்செந்தூர்க் கோயிலுக்கு பாக்கு வைக்க வேண்டும். ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் 1 1 / 4 பணமும், முருகனுக்குக் கட்டிய பட்டும் கோயிலில் இருந்து கொடுத்து விடப்படும்.அப்பத்தைக் கட்டிக் கொண்டு தான் திருமணம் நடைபெறும். பள்ளர்கள் இறந்தாலும், ஆணாக இருந்தால் வேட்டி, துண்டும், பெண்ணாக இருந்தால் சேலையும் அடக்கச் செலவுப் பணமும் கோயிலிலிருந்து கொடுத்து விடப்படும்.
பின்னாளில் பள்ளர் குளத்தில் பிறந்த ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த சாத்தூர், சின்ன ஓடைப்பட்டியைச் சேர்ந்த கோ.சங்கிலி என்பவர் திருச்செந்தூர் கோயிலின் அறங்காவல் குழுவில் இருந்தார். அதன் பின்னர் கோயில் நிர்வாகத்திற்கும், பள்ளர்களுக்குமான உறவுகள் முற்றிலும் அறுந்துப் போய் விட்டது. இருப்பினும் வரலாற்றுத் தொடர்புகள் சில உரிமைகளை நிலை நாட்டிக் கொண்டு இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை முருகனுக்குப் பிடிக்கப்படும் வெண்கொற்றக் குடையும், இரண்டு சேவல் கொடியும் திருச்ன்சென்தூர்க் கோயிலில் இருந்து தெருச்செந்தூர் பட்டிக்கு கொடுத்து விடப்படும். அவ்வாறு இறுதியாகக் கொடுத்து விடப்பட்ட வெண்கொற்றக் குடையிலுள்ள வெண்கல கலசமும், இரண்டு சேவை கொடியும் திருச்செந்தூர் பட்டியிலுள்ள அம்மன் கோயிலில் தான் இன்றும் உள்ளது. உடையார் குளம், வடக்குக் காரசேரி, ஒனாகுளம், சிங்கத்தாங்குறிச்சி, ஆலந்தா, வல்லநாடு, நாணல்காடு, முத்தாலங்குறிச்சி, முறப்பநாடு, படுகையூர், காசிலிங்காபுரம், அனைவரதநல்லூர் ஆகிய ஊர்களில் இருந்து பள்ளர்கள் காவடி கட்டித் திருச்செந்தூர்பட்டியில் ஒன்று கூடி அங்கிருந்து திருச்செந்தூர் சென்று மேற்கு வாயில் வழியாகச் சென்று முருகனை வழிபட்டு வந்தனர். அதன் பின்னர்தான் மேற்கு வாயில் அடைக்கப் பட்டது.
"பழம்பெரும் கோயில்களின் மேற்கு வாயில்,பாண்டிய மன்னர்களும் அவர் தம் மரபினரும் வருகின்ற வழியாதலால் பாண்டியர் ஆட்சி முடிவுக்கு வந்த போது கோயில்களின் மேற்கு வாயில்கள் மூடப் பட்டன. அதிகாரத்தை இழந்ததால் பாண்டிய மரபினரான பள்ளர்களுக்கும் கோயில் நுழைவு மறுக்கப் பட்டது" என்ற வரலாற்று அறிஞர் இரா.தேவ ஆசீர்வாதத்தின் கூற்று முற்றிலும் உண்மை என்பது இக்கோயில் வரலாற்றால் உறுதி செய்யப் படுகிறது.
திருச்செந்தூர்க் கோயிலின் மேலக் கோபுர வாயிலும் பாண்டியர் ஆட்சி முடிவுக்கு வந்தபோது இழுத்து மூடப் பட்டுள்ளது. மேற்கு வாயில் பகுதியில் உள்ள தூண்களில் குடும்பன் பெயர் தாங்கிய பல கல்வெட்டுப் பொறிப்புகள் காணப்படுகின்றன. மேலக் கோபுர வாயிலில் அமைந்துள்ள தெருவிக்குக் கோட்டைத் தெரு என்று பெயர். இத்தெருவில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்திற்குப் பாத்தியப் பட்ட பத்து பழம் பெரும் மடங்கள் அமைந்துள்ளன. திருச்செந்தூர்ப் பகுதியைச் சுற்றியுள்ள பள்ளர் குலத்தாரின் கிளைப் பிரிவினர் ஒவ்வொருவருக்கும் ஒரு மடம் என்ற கணக்கில் பத்து பெருமடங்கள் உள்ளன. கோயிலின் மேற்கு வாயிலிலிருந்து கோட்டைத் தெரு வழியாக வரும் போது முதலாவதாக 'அஞஞாப் பள்ளர்' மேடம் உள்ளது. அதன் கீழ்ப்புறம் 'வாதிரியப் பள்ளர்' மடமும், 'சோழியப் பள்ளர்' மடமும் சேர்ந்தார்ப் போல் உள்ளது. அதன் கீழ்ப்புறம் 'வங்கப்பள்ளர்' மடம் உள்ளது. அடுத்ததாக 'அளத்துப் பள்ளர்' மடமும், அதன் கீழ்ப்புறம் 'கொற்கை நாட்டார்( பள்ளர்)' மடமும் உள்ளது. அதற்க்கடுத்ததாகப் 'பருத்தி கோட்டை நாட்டார் (பள்ளர்)' மடமும், 'சீவந்திவள நாட்டார் (பள்ளர்)' மடமும், 'வீரவள நாட்டார் (பள்ளர்)' மடமும் உள்ளன. ஒவ்வொரு மடமும் அரைக்குறுக்கத்திற்கு மேல் பரப்புக் கொண்டதாகச் சுற்றுசுவர் கட்டப் பட்டுள்ளது. இவற்றில் ஐந்து மடங்கள் பயன்பாட்டிலும், நான்கு மடங்கள் பாழடைந்த நிலையிலும் இருக்கின்றன. வீரவள நாட்டுப் பள்ளர் மடத்திற்கு வடபுறம் அருகே இருந்த ஒரு பள்ளர் மடம் மற்றவர்களுக்கு விற்கப் பட்டு மடம் இருந்த சுவடு தெரியாமல் அவ்விடம் வீடுகளாகிப் போயின. கோட்டைத் தெருவின் முடிவில் வண்டிகள் நிறுத்துவதற்காக இருந்த பள்ளர்களுக்கு உரிமையுடைய நிலங்கள் பின்னாளில் பறையர்களுக்கு கையளிக்கப் பட்டது. இது தமிழர்களாகிய பள்ளர்களையும், பறையர்களையும் மோத விட்டு பிரித்தாளும் வடுகச் சூழ்ச்சியாகும்.
இக்கோயிலின் மேற்கு வாயில் ஆண்டிற்கு ஒருமுறை முருகன், தெய்வானை திருமணம் நடைபெறும் காலத்தில் மட்டும் திறக்கப் படுகிறது. திருப்பரங்குன்றத்தில் தற்போதும் நடைமுறையில் உள்ள முருகனுக்கும், தேவேந்திரனின் மகள் தெய்வானைக்கும் திருமணம் முடிந்து தேவேந்திர குல வேளாளர் மண்டபத்திற்கு மறு வீடு செல்லும் வழக்காறு திருச்செந்தூர்க் கோயிலில் வழக்கொழிக்கப்பட்டுள்ளது.
கால ஓட்டத்தில் பள்ளர் குலத்தவர்கள் இக்கோயில் உரிமைகளில் நாட்டம் செலுத்தாததாலும், பலர் கிருத்துவம் தலுவியதாலும், நாடர்களாகிய 'சாணார்' சமூகத்தவர்கள் இக்கோயிலில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். இதற்க்கு இவர்களின் சமூக எழுச்சியும், பொருளியல் மேம்பாடும், அரசியல் அதிகாரப் பகிர்வும் அடிப்படையாய் அமைந்திருந்தது. இக்கோயிலில் பள்ளர் குலத்தவர்கள் முதல் மரியாதை இழந்து, முற்றிலும் உரிமைகள் பறிக்கப் பட்ட போதிலும் இக்கோயில் பள்ளர்களுக்கு மட்டுமே உரிமை உடையதேன்பதும், பள்ளர் குலத்தவர்களே பாண்டிய மரபினர்கள் என்பது இக்கோயில் சொல்லும் வரலாறு உண்மையாம்.
1965ல் எனது தந்தையுடன்சென்று விளைந்த முதல் நெல்லை மேற்குவாசலில் அம்பாரமாய் கொட்டிவிட்டு வந்திருக்கிறேன்.தற்போது நெல்லுக்குப்பதிலாக பணம்காணிககையாக செலுத்தப்படுகிறது. .
ReplyDeleteமகிழ்ச்சி ஐயா.
Delete